எஸ்.எம்.எம்.முர்ஷித்.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள், ஆர்வலர்களுக்கான தமிழ் மொழி மூல ஊடக அறிமுகச் செயலமர்வு ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை முழு நாள் செயலமர்வாக இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் தலைமையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடக செயலமர்வில் முதலாவது அமர்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.என்.முகுந்தன் கலந்து கொண்டார்.
அத்தோடு சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடக செயலமர்வில் இரண்டாவது அமர்வில் பிரதம அதிதியாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக சுதந்திர ஊடக அமைப்பின் தேசிய தவிசாளர் எம்.அமீன், சுதந்திர ஊடக அமைப்பின் தேசிய செயலாளர் இப்ரான்ஸா பௌருதீன், மரண விசாரணை அதிகாரியும், சுதந்திர ஊடக அமைப்பின் தகவல் பிரிவின் மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம்.நஸீர், ஓட்டமாவடி மத்திய கல்லூரி அதிபர் ஹலீம் இஸ்ஹாக், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள், ஆர்வலர்களுக்கான தமிழ் மொழி மூல ஊடக அறிமுகச் செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகரும், செய்தி ஆய்வாளருமான எம்.நௌஷாட் முகைதீன் விரிவுரையாளராக கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
தமிழ் மொழி மூல ஊடக அறிமுகச் செயலமர்வின் இறுதியில் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச இணைப்பாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்;டது.