பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் Antivirus Mask எனப்படும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தி போதுமான அளவுக்கு இல்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவர் ரெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை உலகம் எதிர்கொள்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வைரஸ் தடுப்பு முகமூடி உற்பத்தியில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தீர்க்க நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கென்று உள்ள விநியோகச் சங்கிலி வலையமைப்பின் உறுப்பினர்களுடன் பேசி பாதுகாப்பு வேலைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசரமான பணியில் நான் ஈடுபட்டுவருகிறேன்.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே உதவி தேவைப்படும் நாடுகளுக்கு முகக் கவசங்கள், கையுறைகள், சுவாசக் கருவிகள், பாதுகாப்பு தனிமைப்படுத்தும் ஆடைகள் மற்றும் சோதனைக் கருவிகளை உலக சுகாதார அமைப்பு அனுப்பிவருகிறது.
இதுவேளை, வைரஸின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்ள சில நாடுகள் தவறிவிட்டன. அந்தத் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள அந்த உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
கொரோனா வைரஸ் பரவலைத் தனியாக எந்த நாடும் எந்த அமைப்பும் தடுத்துவிட முடியாது. கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்றாலும் உயிரிழப்புக்கள் தொடர்கின்றன” என்றார்.