உதயங்க வீரதுங்க, அர்ஜுன மகேந்திரன் போன்ற சந்தேகநபர்களை இலங்கைக்குள் அழைத்துவர அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
புத்தளத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“ஆட்சிக்கு வரும் முன்னர், அனைத்து அரசியல்வாதிகளும் ஊழலை ஒழிப்போம் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்த எவரும் தீவிரம் காட்டுவதில்லை.
வெளிநாட்டில் இருக்கும் உதயங்க வீரதுங்க, இந்நாட்டின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடுகிறார். ஆனால், அவரை இந்நாட்டுக்குள் அழைத்துவர எவரும் முயற்சிப்பதில்லை.
அதேபோல், அர்ஜுன மகேந்திரனும் இங்குள்ளவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கிறார். இவரையும் நாட்டுக்குள் அழைத்துவர முடியாதுள்ளது.
ஜாலிய விக்ரமசூரியவையும் நாட்டுக்குள் அழைத்துவர முடியாத நிலைமையேக் காணப்படுகிறது. இதிலிருந்தே, குற்றவாளிகள் எல்லாம் ஆட்சியாளர்களுடன் மிக நெருங்கியத் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.
திருடர்களைப் பிடிக்கத்தானா மக்கள் ஆணை வழங்கினார்கள் என்ற சந்தேகம்கூட எழுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பாக எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் பாரபட்சம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என மேலு தெரிவித்தார்.