அடுத்த மாதம் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை புறநகர் பகுதியில் ராகுல் பங்கேற்க இருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்த போது ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். அதன்பிறகு அவர் பெரும்பாலான மாநிலங்களுக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இதையடுத்து உற்சாகம் அடைந்துள்ள ராகுல் மீண்டும் தீவிர அரசியல் பணிகளை தொடங்கி உள்ளார்.
அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநில காங்கிரஸ் கமிட்டிகள் அவருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பி வருகின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளனர். சமீபத்தில் அவர்கள் டெல்லியில் ராகுலை சந்தித்து கட்சி பணிகள் குறித்து பேசினார்கள்.
அப்போது தமிழ்நாட்டுக்கு வருமாறு ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அதற்கு ராகுல் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். சென்னையில் பொதுக்கூட்டத்தில் பேச அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் ராகுல் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியில் ராகுல் பங்கேற்க இருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்களை அந்த பொதுக்கூட்டத்துக்கு திரட்ட தமிழக காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். எனவே சென்னை புறநகர் பகுதியில் எங்கு ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என்று ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
ராகுலை வரவேற்கவும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் சென்னைக்கு வர வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.