சில சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு புரளியை பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “போடோ நில உரிமை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்கிறேன். 50 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளீர்கள். போடோ இயக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரின் உணர்வும் மதிக்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக குடியிருக்கும் நிலை இருந்து வந்தது. போடோ ஒப்பந்தத்தின் மூலம் அவர்களுக்கு புதிய வசதிகளும், தேவைகளும் கிடைக்கும் சூழல் உள்ளது.
அசாமுக்கு எதிரான உணர்வையும், தேசத்துக்கு எதிரான உணர்வையும் சகித்துக் கொள்ள முடியாது. அசாமுக்குள் உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் வேண்டுமென்றே திட்டமிட்டு புரளியை பரப்புகின்றன. இதனை ஏற்க முடியாது.
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். யாருடைய நலனும் பாதிக்கப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடோ பழங்குடியின மக்களின் உரிமைகளை வலியுறுத்தி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பு ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது. அந்த அமைப்புடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.