கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு தேவைகளை கொண்டவர்களுக்கும் படைத்தரப்பு இப்பொழுது உதவி வருகிறது. யாழ்ப்பாணத்தின் குருதி வங்கியில் அதிகம் குருதிக்கொடை செய்வது படைத்தரப்பு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி ஒருவர் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது யாழ்ப்பாணத்தவர்களின் ரத்தத்தில் படைத்தரப்பின் இரத்தமும் கலந்து இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
ரத்தம் மட்டுமல்ல ஏனைய பல பொருட்களையும் படைத்தரப்பு தானம் வழங்கி வருகிறது. நலிந்தவர்களுக்கு வீட்டு திட்டங்களை அமைத்துக் கொடுப்பது, பாடசாலை பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவது, கண்பார்வை குறைந்தவர்களுக்கு கண்ணாடிகளை வழங்குவது, விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்ப்பது, கிணற்றுக்குள் விழுந்த வரை மீட்டுக் கொடுப்பது, இயற்கை அனர்த்த காலங்களில் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைவது போன்ற பல்வேறு நலன்புரி சேவைகளையும் படைத்தரப்பு முன்னெடுத்து வருகிறது. இது போன்ற நலச் சேவைகளுக்கென்றே படைத் தரப்பு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற ஒரு பிரிவையும் வைத்திருக்கிறது.
இவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் சாதிச் சண்டை காரணமாக தேர் இழுப்பதற்கு ஆளில்லாத கோவில்களில் படைத் தரப்பு தானாக முன்வந்து தேரையும் இழுத்து கொடுக்கிறது. தமிழ் பகுதிகளில் இப்போது கீழிருந்து மேல்நோக்கிய மிகப் பலமான நிறுவனக் கட்டமைப்பு கொண்டிருப்பது படைத்தரப்புதான். ஆள் பலமும் உபகரண வளமும் உடைய நிறுவனக் கட்டமைப்பு அது. எனவே சிவில் கட்டமைப்புக்களைப் போலன்றி விரைந்து நலன்புரி சேவைகளை வழங்கக் கூடிய ஒரு தரப்பாகவும் படையினர் காணப்படுகிறார்கள். தமிழ் பகுதிகளில் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் கீழிருந்து மேல் நோக்கிய பலமான வலைக் கட்டமைப்பு இருக்கிறதோ இல்லையோ படைத் தரப்பிடம் அது இருக்கிறது.
இது தொடர்பில் அண்மை ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார். படைத்தரப்பு மேற்சொன்ன நலன்புரி சேவைகளின் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை கவர்ந்து தனது சிங்கள-பௌத்த விரிவாக்கத்தை முன்னெடுக்கிறது என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தயாரில்லாத ஓர் அரசுக் கட்டமைப்பின் அங்கமாக உள்ள படைத்தரப்பு போரில் தோற்கடிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தீர்வு எதையும் வழங்காத ஒரு பின்னணியில் இதுபோன்ற நலன்புரிச் சேவைகளைச் செய்யும் போது அதுவும் கட்டமைப்புசார் இனப்படுகொலையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படும். ஏனெனில் யுத்த வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்றத் தயாரில்லை என்றால் அது ஒரு மக்கள் கூட்டத்தை தொடர்ந்தும் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக பேணுவதற்குரிய ஓர் அரசியல் தான. அது எல்லா விதத்திலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் ஒர் அரசியல்தான்.
இந்த அடிப்படையில் சிந்தித்தால் மேற்சொன்ன ஊடகவியலாளர் முகநூலில் பதிவிட்டு இருப்பது சரியானது. அதேசமயம் இத் தோற்றப்பாட்டுக்குப் பின்னால் வேறு ஆழமான காரணிகளும் உண்டு. படைத்தரப்பு நலன்புரி சேவைகளில் ஈடுபடுகிறது என்றால் அவ்வாறான நலன்புரி சேவைகளைப் பெற வேண்டிய ஒரு நிலையில் ஒரு பகுதி தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக கடைசிக் கட்டப் போருக்கு பின்னரான வன்னிப் பெருநிலத்தில் அவ்வாறான தேவைகளோடு காணப்படும் சாதாரண ஜனங்கள் அதிகம். போரின் விளைவுகளாகக் காணப்படும் உடனடிப் பிரச்சினைகளை அரசாங்கமும் போதிய அளவுக்கு தீர்க்க்கவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் தீர்க்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளாலும் தீர்க்க முடியவில்லை
இது தொடர்பில் ஒன்றிணைக்கப்பட்ட நிறுவனமயப்பட்ட ஒரு பொறிமுறை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. அவ்வாறான ஒன்றிணைத்த ஒரு பொறி முறை இல்லாத வெற்றிடத்தில் தான் எல்லாத் தரப்பும் தமிழ் மக்களுக்கு தானம் வழங்க முன் வருகின்றன. சில புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகள் தானங்களை வழங்கும் பொழுது படங்களை எடுத்து முகநூலில் பிராசுரிக்;கின்றன. வேறு சில அமைப்புகள் ஒரு கை கொடுப்பது மறு கைக்க்குத் தெரியாதபடி பரபரப்பின்றி உதவிகளைச் செய்கின்றன. வன்னியில் இடுப்பிற்குக் கீழ் வழங்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவிகளை விடவும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் வழங்கும் உதவிகள் அதிகம் என்று ஒரு புள்ளி விபரம் உண்டு.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் உதவிகளை வழங்குகின்றன. கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி உட்பட தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட எல்லா கட்சிகளுமே அதைத்தான் செய்கின்றன. தேசியவாத நிலைப்பாட்டை கொண்டிராத கட்சிகளும் அதைத்தான் செய்கின்றன.
பல சமயங்களில் கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் போது பொருட்கள் தருவோம் என்று ஆட்களை அழைப்படுகிறார்கள். சிறுவர்களுக்கு உண்டியல், பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள், மிதிவண்டிகள், விளையாட்டுக் கழகங்களுக்கும் இளையோர் அமைப்புகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள். குடும்பப் பெண்களுக்கு பாய்கள், நுளம்பு வலைகள், தையல் மிஷின்கள், கோழிக்கூடு, கோழிகள், மாடுகள் போன்ற வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றன.
போரின் பின் விளைவுகளாக காணப்படும் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்படி கொடைகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவுகின்றன என்பது உண்மைதான். ஆனாலும் 2015ஆம் ஆண்டு நோர்வேயில் ஒரு தமிழ் பள்ளியில் நான் சந்தித்த ஒருவர் எனக்கு கூறியது போல நாங்கள் உதவி இருக்காவிட்டால் தாயகம் சோமாலியாவாக மாறி இருந்திருக்கும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று.
மேற்படி உதவிகள் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை என்பது ஒரு சமூகப் பொருளாதார அரசியல் யதார்த்தம். தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பது அரசியல் யதார்த்தம். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்கவும் அதற்கு தேவையான நிதியை திரட்டவும் வேண்டிய அதிகார கட்டமைப்பு எதுவும் தமிழ் மக்களுக்கு கிடையாது. வட மாகாண சபை அவாறான நிதி கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டபோது அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேசமயம் தென்பகுதியில் உள்ள சில மாகாணசபைகளுக்கு அவ்வாறான முதலமைச்சர் நிதியம் என்ற கட்டமைப்பை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
கேப்பாபிலவில் வருடப் பிறப்பிலன்று போராடும் மக்களை நோக்கி தின்பாண்டங்களுடன் வரும் படையினர்
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தேவையான ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. அவ்வாறான உதவிகளைப் புரியும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியிலும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு இல்லை. போதாக்குறைக்கு உதவிபுரியும் அமைப்புகளுக்கு இடையே போட்டி பூசல்களும் உண்டு. இதுவும் உதவி வழங்கும் பொறிமுறைகளை பாதிக்கின்றது.
எனவே இது விடயத்தில் தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதற்கு பொருத்தமான ஒரு கட்டமைப்பு தேவை. அப்படி ஒரு கட்டமைப்பை தமிழ் தரப்பால் இதுவரையிலும் ஏன் உருவாக்க முடியவில்லை? அதற்கு அரசாங்கமும் ஒரு தடையாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அதையும் மீறி புலம்பெயர்ந்த தமிழர்கள் சில கட்டமைப்புக்களை கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கியிருக்க வேண்டும். உதாரணமாக ஒரு தமிழ் ஐ.என்.ஜியோ ஒரு தமிழ் வங்கி போன்றவற்றை ஏன் உருவாக்க முடியவில்லை? அந்த வங்கி தமிழ் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. ஆனால் அது போரின் பின் விளைவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு பொருத்தமான நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் குறைந்த பட்ச கட்டமைப்பாக இருக்கும். அனைத்துலகச் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அப்படிப்பட்ட கட்டமைப்புக்களின் மூலம் தமிழ் நிதியானது ஒன்று திரட்டப்பட்டு ஒரு பொருத்தமான பொறிமுறை ஊடாக மக்களுக்கு உதவி வழங்கப்படுமாக இருந்தால் இப்போது இருக்கும் வெற்றிடம் அகற்றப்பட்டிருக்கும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவது என்பது கருணையும் அல்ல கொடையும் அல்ல. அது ஒரு தேசியக் கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றவர்கள் கைகொடுத்து நிமிர்த்தும் போது தான் மக்கள் திரளாக்கம் அதன் மெய்யான பொருளில் நிகழும். தினக்குரல் பத்திரிகை நீண்டகாலமாக இவ்வாறு உதவிகளையும் தேவைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு செய்முறையை கருணைப்பாலம் என்று பெயரிட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்த வெற்றிடத்தைத் தான் படைத் தரப்பு பயன்படுகிறது. தமிழ் மக்களுக்கு அவர்கள் கேட்கும் ஒரு அதிகார கட்டமைப்பை வழங்க தயாரில்லாத சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பானது தனது படைத்தரப்பின் மூலம் இவ்வாறான உதவிகளை செய்யும் போது அதை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகவோ அல்லது நலன்புரிச் சேவையாகவோ மட்டும் விளங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் தங்களுக்குரிய உடனடித் தேவைகளை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு அதிகார கட்டமைப்பை கேட்கிறார்கள். அதைத்தான் அரசாங்கம் முதலில் செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் தமிழ் மக்களை தொடர்ந்தும் சகல தரப்புக்களிடமும் தானம் வாங்கும் மக்களாக வைத்திருக்க நினைப்பது என்பது தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அரசியல் ரீதியாகக் கையேந்தும் நிலையில் வைத்திருக்கும் ஒரு திட்டம்தான். அதாவது அது யுத்தத்தின் இன்னொரு வடிவம்தான்.
நிலாந்தன் மகா