கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துகள் 2 கோடியைத் தாண்டி விட்டது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் நகராட்சி காமராஜர் சிலை அருகே இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் இயக்கத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கையெழுத்து இயக்கம் என்ன நோக்கத்திற்காக நடைபெறுகிறது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் அரசியல் நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு இதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய குடியுரிமையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மத்தியில் இருக்கும் பா.ஜ.க அரசு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்ற இந்த 3 கொடுமையான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
நாட்டைப் பிளவுபடுத்தி, மக்களைக் கொடுமைப்படுத்தும் வகையில், குறிப்பாகச் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம்கள், இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கி இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆகியோரைக் கொடுமைப்படுத்தும் இந்தச் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது.
நாட்டில் நிலவும் முக்கியமான 3 பிரச்சினைகள், பொருளாதாரம் மிக கீழ்நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. விவசாயிகள் பல கொடுமைகளுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வேளாண்மைத்துறை நசிந்து வருகிறது. பட்டதாரிகள், இளைஞர்கள் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த 3 பிரச்சினைகளையும் மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். அதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருக்கும் அனைவரும் சமம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமமாக யாரும் வாழக்கூடாது என்ற உள் நோக்கத்துடன் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.