வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லப் போவதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்திவருகின்ற கருத்துக்கள் அல்லது அவருடைய நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி கோட்டாபயவைப் பொறுத்தவரையில் இன்று அல்லாது முன்பிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகின்றார். இதன்காரணமாகவே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.
இருந்தாலும் அவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் நாட்டின் அபிவிருத்தி பற்றி அவர் கதைக்கிறார். ஆகவே நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் உண்மையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டில் ஒரு சுமுகமான நிலைமை ஏற்பட்டால் தான் வெளிநாடுகளும் முதலீடு செய்ய முன்வரும். அதனூடாகவே அபிவிருத்தி நோக்கிப் பயணிக்க முடியும்.
மேலும் இனப்பிரச்சினை விடயத்தில் ஜனாதிபதி வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தாலும் இந்த ஆட்சியில் இன்று பிரதமராக இருக்கின்ற அவருடைய சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இந்தியா உட்பட பல்வேறு தரப்பினரிடம் சொல்லியுள்ளார்.
ஆகையால் இன்று ஜனாதிபதி என்ற சொல்லியிருந்தாலும் நாங்கள் எங்களுடைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதியும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்.
அடுத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான அமைப்பாக உருவாகினால் சமபலத்துடன் நின்று பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதனடிப்படையில் ஜனாதிபதியுடன் பேச வேண்டுமென கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டிருக்கின்றார். ஆகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எங்களுடன் பேசத்தான் வேண்டும். பேசாமல் இங்கிருந்து தனியாக எதனையும் செய்ய முடியாது.
இதேவேளை, கடந்த காலங்களிலும் இவரைப் போல கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த சிங்களத் தலைவர்கள் எல்லாம் பின்பு அந்த நிலைப்பாடுகளிலிருந்து விலகி ஒப்பந்தங்களை எழுதிய சரித்திரங்கள் எல்லாம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.