இடம்பெற்ற விமான விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு வாரத்திற்குள் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விமானப்படைத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வீரவில விமானப்படை முகமிலிருந்து ரத்மலானை செல்வதற்காக புறப்பட்ட விமானப் படைக்குச் சொந்தமான வை-12 என்ற இலகு ரக விமானம் அப்புத்தளை பகுதியில் வைத்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இதன்போது விமானத்தின் பிரதான விமானியாக கடமைபுரிந்த ஸ்கொடன் லீடர் டப்ளியூ.ஏ.எம்.பி.என்.பி.வீபெத்த, உதவி விமானி பிளைட் லெப்டினன் கே.எம்.டி.எல்.குலதுங்க ஆகியோரும் அவர்களுக்கு உதவியாக கடமையில் இருந்த சார்ஜன்ட் நிலை வீரர்களான டி.டபிள்யூ.ஆர்.டபிள்யூ.குமார மற்றும் எல்.ஏ.சி.ஹெட்டியா ஆராச்சி ஆகியோரும் உயிரிழந்திருந்தனர்.
இவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவை பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. நேற்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆராய்வதற்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அப்புத்தளை பொலிஸாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விமானப் படையினால் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் அடங்கிய குழுவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் செனவிரத்ன, விசாரணை தொடர்பான அறிக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர், விமானப்படை தளபதியின் ஆலோசனைக்கமைய அது ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்று கூறினார்.