சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் சந்தேகத்தில் சந்தேகநபர் ஒருவரை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மிக மோசமாகத் தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.
சந்தேகநபர் தாக்குதலுக்கு இலக்காகி இரத்தக் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல்நிலை குறித்து அவதானித்த நீதவான் அது தொடர்பாக சந்தேகநபரிடம் வினவிய போது, தன்னை பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டதுடன், உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன் அவரது தனிப்பட்ட ஒழுக்கங்கள் தொடர்பாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.