ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சோதனையிட்டிருந்தனர்.
இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், குறித்த தேடுதலின் போது அவரது வீட்டில் இருந்து அனுமதி பெறாத கைத் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் சில சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டமையினைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தேடுதல் நடைபெற்றவேளை சமூக வலைத்தளம் மூலமாக காணொளி நேரலையில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, “நான் என்ன தவறு செய்தேன் எனத் தெரியாது. ஆனாலும் எனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.