தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஜனக பண்டார தென்க்கோனை நேரில் சந்தித்து அங்கஜன் இராமநாதன் எழுத்துமூல கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அக்கடிதத்தில், இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் 1949ஆம் ஆண்டு முதலாவது சுதந்திர தினத்தில் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
சுதந்திர தினத்தில் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்று முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல அரசால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது எனபதையும் அங்கஜன் இராமநாதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களமொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரை சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வில் சிங்கள மொழியிலும் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்பதை அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அரசியலமைப்புக்கு முரணானதாகவோ பொது பாரம்பரியத்துக்கு மாறானதாகவோ அமையமாட்டாது என்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது அடையாளம் என்பதுடன் வெவ்வேறு இனங்களை ஒன்றிணைக்கின்றதாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த 1949ஆம் ஆண்டு முதலாவது சுதந்திர தின தேசிய நிகழ்வில் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதன்பின்னர் சிங்களமொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டிலிருந்து நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வில் சிங்கள மொழியிலும் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் புதிய அரசு பதவியேற்ற பின்னர் வரும் 72ஆவது சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வில் சிங்களமொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட வந்தநிலையில் சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என அங்கஜன் இராமநாதன் கேட்டுள்ளார்.