சிறைக் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சிறைக் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
கைதியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் இதுகுறித்து தாம் கவனமெடுப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மட்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் காய்ச்சல் காரணமாக மட்டகளப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்தார்.
இவரது மரணம் தொடர்பாக நீதிபதியே நேரடியாக வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே சிறைக்கைதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறு 12 கைதிகள் ஆர்பாட்டத்தில் பங்குகொண்டிருந்துள்ளதுடன், இவர்கள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறியும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதன்போது சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டனர்.
காய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கைதி மேலதிக சிகிச்சைக்காகவே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் உயிரிழந்தமையினால் அவரது மரணத்தில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள கைதிகள் நீதிபதியை நேரடியாகவே வந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.