தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மூத்த ஈரானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படவும், அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுமாறும்” இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
ஈராக்கின் பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈரானிய ஆதரவு ஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவமானது அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.