குடியுரிமை திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சார பணிகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம்.
திருத்தப்பட்ட இந்த சட்டம், யாரிடம் இருந்தும் இந்திய குடியுரிமையை பறிக்காது. ஆனால் குடியுரிமையை வழங்குகிறது. தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.