அகதிகளை வெளியேற்றுவதுதான் மத்திய அரசின் அடுத்த பணி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ஜம்முவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தின்படி, ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் நமது நாட்டில் தங்கியிருக்க முடியாது. இனி அவர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவது தான் மத்திய அரசின் அடுத்த பணியாக இருக்கும்.
மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் புகுந்து பல மாநிலங்களை கடந்து ஜம்முவுக்குள் ரோஹிங்கியா அகதிகள் குடியேறியது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் தரப்படும். ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் நமது நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.