இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து மத்திய கிழக்கில் மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலினால் கோபமடைந்த போராட்டக்காரர்கள், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கற்களை எறிந்து பாதுகாப்பு அரண்களை தாக்கியிருந்த நிலையில் பென்டகன் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற துணை ராணுவ குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள கிர்குக் நகரில் அமெரிக்க படைகள் தங்கி இருந்த ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் பலரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து இராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் நிலைகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது.
இதில் 25 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் வன்மையாக கண்டித்தது. அதேபோல் இந்த வான் தாக்குதல்கள் தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும், இது அமெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவ உடையை அணிந்து வந்திருந்த ஆண்களும், பெண்களும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கொடியை கைகளில் ஏந்தி அமெரிக்காவுக்கு எதிரான கண்டனம் தெரிவித்திருந்தபோது குறித்த வன்முறை சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.