திட்டங்களுக்காக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியின் மிகுதி தொகையை புதிய அரசாங்கம் வழங்கி முடிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
நிதிப் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைவில் வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கான நிதி கிராமமட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அந்த வேலைகளை முடித்து அதற்கான சிட்டைகளை வழங்கிய போதிலும்கூட இன்றுவரை அவர்களுக்கு பெருந்தொகையான பணம் வழங்கப்படாதுள்ளது.
எங்களைப் பொருத்தவரையில் அரசாங்கம் ஒன்றே. எனவே புதிய அரசாங்கம் வந்திருந்தாலும் மக்களுக்கான சகல நிதியையும் வழங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.
எனவே அபிவிருத்தி நிதியை மக்கள் அமைப்புகளுக்கு வழங்கியமையால் அவர்களும் அந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்காக அமைப்பின் தலைவர்கள் தமது சொந்த நகைகளக் கூட அடைவு வைத்து வேலைகளை முடித்துள்ளனர். எனினும் இன்று வரை அந்த பணம் வழங்கப்படவில்லை.
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனவே புதிய அரசாங்கம்தான் அந்த நிதியை பிரதேச செயலகங்களுக்கும் அரசாங்க அதிபருக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.
அடுத்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக கட்டப்பட்ட வீடுகளுக்கான மிகுதிப் பணமும் வழங்கப்படவில்லை. வடக்கில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் அதே நிலைப்பாடே உள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையும் தற்போதுள்ள இந்த அரசாங்கத்தின் ஒரு பங்காகும். எனவே இவர்கள் பணத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். மழை காலத்தில் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர். இருந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளைக் கட்டி முடித்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை.
சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் பகுதியாக நிதிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது தடுக்கப்பட்டுள்ளது. மிகுதி நிதியை வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த நிதியை இந்த அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.