உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புத்தாண்டு தினம் முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உட்பட அதன் அருகிலுள்ள நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மின்சாரம் பல மாவட்டங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் போக்குவரத்துத் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தோனேசியா மோசமான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக கொலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளை அந்நாட்டு பேரிடர் முகாமைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.