கமிட்டியின் பரிந்துரை நகலை எரித்து சந்திரபாபு நாயுடு இன்று (செவ்வாய்க்கிழமை) போகி கொண்டாடினார்.
தமிழகத்தில் இன்று போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்தி போகியை வரவேற்பது வழக்கம்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு போகி கொண்டாடினார்.
அமராவதி பரிரக்சன சமிதி சார்பில் விஜயவாடாவில் போகி கொண்டாட்டத்துடன், தலைநகர் அமராவதிக்கு ஆதரவான போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
இதன்போது ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் தேவை என்று முதன் முதலில் பரிந்துரை செய்த, ஜி.என்.ராவ் கமிட்டியின் பரிந்துரை நகலை அவர் எரித்து போகி கொண்டாடினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று, ஜி.என்.ராவ் கமிட்டி அறிக்கை நகலை எரித்தமை குறிப்பிடத்தக்கது.