முன்னிலை வகித்துப் போராடிய சுவீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரெற்றா துன்பேர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக ‘ரைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“இந்த ஆண்டு உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையின் வலிமையான குரலாக கிரெற்றா மாறினார், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார்” என ரைம் பத்திரிகையின் இந்த பரிந்துரையை அறிவித்த அதன் தலைமை ஆசிரியர் எட்வேர்ட் ஃபெல்செந்தல் தெரிவித்துள்ளார்.
ரைம் பத்திரிகையின் இந்த கௌரவத்தை, #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக கிரெட்டா துன்பேர்க் அவரது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரெட்டா துன்பேர்க் கடந்த ஆண்டு ஓகஸ்ற் மாதம், உலக வெப்ப மயமாதலைத் தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.
இதன்மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அப்போதுதான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹாஷ்டேக் மிகவும் பிரபலமானது.
கடந்த செப்ரெம்பர் மாதம், நியூயோர்க்கில் நடந்த ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.
இதேவேளை, 1927ஆம் ஆண்டில் இருந்து ரைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய கிரெற்றா துன்பேர்க் தான் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.