பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றத்திற்கு வரும்போது எரியூட்டப்பட்டமை குறித்து மக்களவையில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஒருபுறம் ராமர் கோவில் கட்டுகிறார்கள், மறுபுறம் சீதாவை எரிக்கிறார்கள் என விமர்சித்துள்ளது.
குறித்த விவவாகரம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றதில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டதுடன், காங்கிரஸ் உறுப்பினரான ரஞ்சன் ஆதிர் சவுத்ரி, பா.ஜ.க அரசை கடுமையாக சாடியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ஒருபுறம் ராமர் கோவில் கட்டுகிறார்கள், மறுபுறம் சீதாவை எரிக்கிறார்கள். எங்கே செல்கிறது நாடு? பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதில் அவர் 95 சதவீத தீக்காயம் அடைந்துள்ளார்’ எனக் கூறினார்.
இதனையடுத்து பா.ஜ.க அரசை குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறிது நேரத்தில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நீதிமன்றத்திற்கு வரும்போது 5 பேர் அவரை உயிரோடு எரித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.