நோக்கில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயாபீன், பன்றி இறைச்சி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கு வரி வீதம் குறைக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட ஒரு சில பொருள்களுக்கான கூடுதல் வரிகளை நீக்க இறக்குமதி வரி ஆணையம் முடிவு செய்துள்ளது.
சீன நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருள்களை அமெரிக்காவிடமிருந்து சீன நிறுவனங்கள் ஏற்கெனவே இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு வர்த்தகப் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சிப் பொருள்கள் மீதான வரியை சீனா மூன்று முறை உயர்த்தியது.
வர்த்தகப் போர் தொடங்குவதற்கு முன்னர் 12 சதவீதமாக இருந்த இறக்குமதி வரி, இந்த செப்டம்பர் மாதம் 72 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க சோயாவுக்கான இறக்குமதி வரியும் 3 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
உலகிலேயே மிக அதிக அளவில் சோயா பொருள்களைப் பயன்படுத்தும் சீனா, தற்போது தனது தேவையை நிறைவு செய்ய பிரேஸில் போன்ற நாடுகளிடமிருந்து அந்தப் பொருள்களை இறக்குமதி செய்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல் பரவல் காரணமாக சீனாவிலிருந்து மூன்றில் ஒரு பங்கு பன்றிகள் அழிக்கப்பட்டன. இதனால், அந்த நாட்டில் பன்றி இறைச்சி இறக்குமதிக்கான தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது.