ராஜினாமா செய்ய முன்வந்த ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தியின் முடிவிற்கு, அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்தோடு, காபந்து பிரதமராக அவர் செயற்படுவார் என அறிவித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்றம், புதிய பிரதமரை அறிவிக்கும்படி, ஜனாதிபதி பர்ஹாம் சலேஹூக்கு, பரிந்துரையும் செய்துள்ளது.
எண்ணெய் வளமிக்க, ஆனால், ஏழை நாடாக உள்ள ஈராக்கில், பிரதமர் அப்துல் மஹ்திக்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் கடன் அதிகரித்தது, ஊழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது போராட்டக்காரர்கள் பிரதமர் அப்துல் மஹ்தி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து, பிரதமர் பதவியில் விலகுவதற்கு, மெஹ்திக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. போராட்டங்கள் தீவிரமடைந்ததாலும், உயிரிழப்பு அதிகரித்துள்ளதாலும், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக, நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த நிலையில் அவரது ராஜினாமாவை அந்நாட்டு நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களில், சுமார் 420 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.