முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பின் மூலம் மர்ம நபரெ் விடுத்த எச்சரிக்கையை அடுத்து குறித்த பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதுடன் அப்பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூர் பொலிஸ் கட்டுப்பாட்டறைக்கு இன்று மாலை 6 மணியளவில் தொலைபேசி எண்ணிலிருந்து ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். அவர், “குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அ.தி.மு.க. அரசு துரோகம் செய்துவிட்டது. அதனால் தலைமைச் செயலகத்தை மனித வெடிகுண்டால் தகர்க்கப் போகிறோம். அடுத்து முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் குண்டு வெடிக்கும்” எனப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக முதல்வர், துணை முதல்வர் இல்லங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தலைமைச் செயலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மர்மநபர் எச்சரித்ததால், அங்கும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
இதேவேளை, பொலிஸார் நடத்திய விசாரணையில் அழைப்பை மேற்கொண்டவர் கோவையிலிருந்து பேசியமை தெரியவந்துள்ளது. தொலைபேசி எண் மூலமாக மர்மநபரை கண்டுபிடிக்க கோவையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்டவரைபு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்கள் மற்றும் பா.ம.க.வின் 1 உறுப்பினரின் ஆதரவுடன் சட்டவரைபு நிறைவேறியது. இதனால் அ.தி.மு.க. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.