பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் தீவு பகுதி மற்றும் தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால், பல ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதுடன், பல தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில் உள்ள ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் ஆகிய கிராமங்களும் பெறுநிலப்பரப்பு கிராமங்களான கட்டைகாடு, மடுக்கரை போன்ற கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேலும் சில தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கும் அச்சம் காணப்படுகின்றது.
அத்துடன் மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருவதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
சில கிராமங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோட முடியாத நிலையில் ஒழுங்கான வடிகான் அமைப்புக்கள் செய்யப்படாத காரணத்தினால் மக்கள் தாமாக முன்வந்து கொட்டும் மழையிலும் கால்வாய்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் தொடர்பாக பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.