புதிய குடியுரிமைச் சட்ட வரைபுக்கு எதிராக அசாம், திரிபுரா மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பயணிகள் ரயில் சேவைகள் முழுவதுமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அசாமின் குவாஹாட்டி, திப்ரூகர் நகரங்களில் விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குவஹாட்டி வரை மட்டுமே சேவையில் ஈடுபடும் என ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இரு மாநிலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி ரயில்வே பாதுகாப்புக்காக கூடுதலாக துணை இராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்த வரைவு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின்னர் இது சட்டமாகும். ஆனால் இந்த வரைபுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பங்களாதேசத்தினரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள்.
பங்களாதேஷில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 இலட்சம் பங்களாதேஷ் இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குடியுரிமை சட்ட வரைபைத் தொடர்ந்து அசாம் மற்றும் திரிபுராவில் இன்றும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் ரயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.