அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய கட்சி உதயமாகியுள்ளதாக ஸ்ரீகாந்தா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார்.
தமிழினத்தின் போர் வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கிறது எனவும் தமிழினம் தன்னைத்தானே ஆளவும் சுதந்திரத்தோடு வாழவும் விரும்புகிறது என்பதை மனதில் பதித்து தமிழ் தேசியக் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என அதன் தலைவர் ஸ்ரீகாந்தா அறிவித்தார்.
அத்துடன், முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அறிவித்தார்.
புதிய கட்சியின் செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிவகுருநாதன், சட்டத்துறை செயலாளராக சட்டத்தரணி ஜெயகாந்தன், தேசிய அமைப்பாளராக சில்வெஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர, கல்வி, நிதி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ரெலோவின் பிரதான தரப்பு, வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த நிலையில் ரெலோவின் யாழ். மாவட்டத்தின் ஸ்ரீகாந்தா உட்பட்ட ஒரு தரப்பினர் தமிழ் வேட்பாளராக களமிறங்கிய எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஸ்ரீகாந்தாவை விசாரணையின் பொருட்டு இடைநிறுத்தியிருந்த நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து புதிய கட்சி தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருந்த நிலையில் இன்று புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.