கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவுள்ளோர் தின விழா இன்று பேத்தாழை குகநேசன் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சண்முகம் சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், கௌரவ அதிதிகளாக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் , வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜெயசுந்தர , மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான க.ஜெகதீஸ்வரன், திருமதி.சந்திரகுமரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளான லெனாட் டேவிட், கந்தவேள் காண்டீபன், ஜெமாட் கிறிஸ்தோபர் சஞ்சீவ், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
'நான் தோற்பதே இல்லை.ஒன்று வெற்றியடைகிறேன் அல்லது கற்றுக் கொள்கின்றேன்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வு கொட்டும் மழைக்கும் மத்தியிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அமைப்பின் தலைவர் சண்முகம் சஜேந்திரன் தனது தலைமையுரையில் யுத்தத்தின் எச்சங்களாயும் மிச்சங்களாயும் வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றோம். எங்களை அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அவர்களுடைய வசதிகள், வாய்ப்புக்களுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்.
நாங்கள் உங்களிடம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. உங்களுடைய அனுதாபப் பார்வையை மட்டும் எம்மீது வீசாதீர்கள் என்றார்.
மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் உள ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது சிறப்பம்சம்.
சமூகத்தில் சுயமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சியாக சமூகசேவை ஆற்றிவருகின்ற தங்கமஹால் நகைமாளிகை உரிமையாளர் இராமசாமிப்பிள்ளை மணி அவர்களது சேவையைப் பாராட்டி அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பிரதேசத்தில் சமூகசேவை உத்தியோகத்தராகப் பணியாற்றி இடமாற்றலாகிச் சென்ற திருமதி.சி.சிவநாயகம் அவர்களும் மேற்படி கௌரவிப்பை பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
திறமைகளை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.