மறவண்புலவு பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொடிகாமம் பேருந்து நிலையத்திலிருந்து ஏ-9 வீதி வழியாக பேரணியாகச் சென்று சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டிருந்தனர்.
காற்றாலை திட்டம் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாத நிலையில் அதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி அதன் கட்டளைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதேச சபையின் தவிசாளர், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எழுத்துமூல உறுதிமொழி வழங்கினார்.
மறவன்புலவு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமது குடியிருப்புக்கு அண்டிய பகுதிகளில் காற்றாலைகள் அமைக்க வேண்டாம் என்று கூறி அப்பகுதியில் காற்றாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.