பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதி நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உடனடியாகவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு மீளவும் இன்று கைது செய்யப்பட்டார்.
சாரதி இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட நிலையில் நிபந்தையுடனான பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன், உயிரிழந்தவர் மனநலம் குன்றியவர் என்றும் அவர் பல வருடங்களாக யாழ்ப்பாணம் நகரில் நடமாடியவர் என்றும் அவர் தொடர்பான தகவல்கள் இல்லை என்றும் பொலிஸார் மன்றுரைத்தனர்.
மரணவிசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், வழக்கை ஒத்திவைத்தார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருத்து பருத்தித்துறைக்குப் புறப்பட்ட பேருந்து வளாகத்துக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு முன்பாகப் பயணித்த போது முதியவர் மீது மோதியது. சம்பவத்தையடுத்து முதியவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
பேருந்தை சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அங்கு மக்கள் கூடியதால் குழப்பநிலை ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய சாரதியைக் கைது செய்தததுடன், பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளாகியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக அறியாமல் சாரதியை பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.