திட்டங்களுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டுக்குப் பாதகமான அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்படிக்கையில் எவ்விதத்திலும் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடாது என நம்புவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஏகாதிபத்திய செல்வாக்கினை இந்த நாட்டில் இருந்து அகற்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடும். கோட்டாபய ராஜபக்ஷவின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயாராக உள்ளது.
எம்.சி.சி. உடன்படிக்கை மிகவும் பாரதூரமான ஒன்றாகும். அதுபற்றி கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பல இடங்களிலும் விவாதத்திற்கு உட்பட்டது.
அரசியல்வாதிகள் மாத்திரமன்றி தொழில் வர்க்கத்தினர், மதகுருமார்கள், கலைஞர்கள், மேலதிக வகுப்பு நேர ஆசிரியர்கள் கூட எம்.சி.சி உடன்படிக்கை பற்றியும் அதில் இருக்கின்ற பாதிப்பு தொடர்பாகவும் நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த உடன்படிக்கையின் ஊடாக நாட்டின் மத்தியில் ஒரு பிளவு ஏற்படுகின்றது. அதில் 12 இலட்சம் ஏக்கர் நிலப்பகுதியின் உரிமை அமெரிக்காவுக்கு வழங்கப்படுகின்றது.
அதனுள் சிகிரியாவும் தம்புள்ளையும் உள்ளடங்குகின்றன. அதுமட்டுமன்றி புராதன பெறுமதிமிக்க பகுதிகளும், பாதுகாக்கப்பட்ட வனாந்தரங்களும், தொல்பொருள் அமைவிடங்களும் உள்வாங்கப்படும்.
தெற்கில் இருக்கின்ற ஒரு முதியவர் வடக்கில் இருக்கின்ற ஒரு மதத் தலத்திற்கு செல்ல வேண்டுமாயின் ஐக்கிய அமெரிக்காவிடம் வீசா பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றுதான் தேர்தல் மேடைகளில் கூறப்பட்டது.
எனவே நாட்டிற்கு அதிபயங்கர பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி எந்த நாளும் அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்பவே ஆடியது. அவர்களுக்கு இதன்பாதிப்பு குறித்து போதிய தெளிவு இல்லை என்பதுதான் உண்மை” என்று அவர் தெரிவித்துள்ளார்.