விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பம் விரிவு படுத்தப்படவுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பதவியேற்றார்.
குறித்த ஆணைக்குழுவின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவர் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்ற பின்னர் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கம் சரியான அபிவிருத்திப் பாதையில் மீண்டும் நாட்டை வழிநடத்தும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயற்பட்டு அரசாங்க சேவையினர் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எமக்கு இப்போது நல்ல தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. மேலும் சிறப்பாக செயற்பட வேண்டும் என்று ஆணைக்குழுவையும் ஊழியர்களையும் கேட்டுக் கொள்கின்றேன். அரசாங்க சேவை ஊழியர்கள் அவர்களின் தோள்களில் கூடுதலான பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்ற கோட்பாட்டின் கீழ் நாடு பூராகவும் 5-ஜீ தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவிருக்கிறது” எனக் கூறினார்.