வானுயர்ந்த பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
ஜார்கண்ட் சட்டசபைக்கான 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகூரில் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ராம ஜென்மபூமியில் ஒரு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 100 ஆண்டுகளாக உலகம் முழுவதிலுமிருந்து இந்தியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்த தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது. எனவே 4 மாதங்களுக்குள் அயோத்தியில் வானத்தை தொடும் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காஷ்மீர் குறித்து பேசிய அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் மாறுவதை நீங்கள் பார்க்க விரும்பவில்லையா? 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர், காஷ்மீர் என்றென்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.