தடம்புரட்டி போட்ட சூறாவளியால், கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சூறாவளியினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரி லுயிசிடோ மென்டோசா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸின் 20ஆவது சூறாவளியாக பார்க்கப்படும் ‘கம்முரி’ இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை லூசன் தீவைத் தாக்கியதாக கூறப்படுகின்றது.
கம்முரி சூறாவளி பலவீனமடைந்திருந்தாலும் வலுவாகவே மையம்கொண்டுள்ளது, மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதன் வேகம் 230 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
இது தற்போது தெற்கு திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக பார்க்கப்படும் இந்த சூறாவளி உள்ளூரில், ‘டைபூன் திசோய்’ என்று குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக இந்த சூறாவளியினால் மணிலா விமானநிலையம் மூடப்பட்டிருப்பதாகவும், கடலோர கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை இன்னமும் கண்டறிய முடியாத நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.