எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் நேற்று இரவு புகுந்த காட்டு யானைகளினால் குடியிருப்பு பகுதியில் உள்ள வேலிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
நேற்று இரவு வாகனேரி பகுதியில் இருந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலை நகர் குளத்தினூடாக வந்த யானையை பிரதேச மக்களும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் துரத்தியபோது அது வயல் பிரதேசம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கூடாக சென்றதனால் அச்சேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரித்தார்.
பிரதேச வாசிகள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு அறிவித்ததையடுத்து அவரின் முயற்சியின் காரணமாக உடனடியாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தியாவட்டவான் வட்டாரத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் அஸீசுல் றஹீம், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் யானைகள் காட்டுக்கு அனுப்பப்பட்டதாக பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார்.