கடலுக்குச் சென்ற படகு கற்பாறையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவரின் சடலம், இன்று (திங்கட்கிழமை) மதியம் கண்டெடுக்கப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை- மனையாவெளி பகுதியைச் சேர்ந்த எம்.எச்.றுக்மன்த சில்வா (37 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை- மனையாவெளி பகுதியிலிருந்து படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் படகு கற்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மற்றுமொரு மீனவர் காணாமல் போயிருந்தார் இவரை தேடும் பணியில் கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்த நிலையில் இன்று, மனையாவெளி கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்