கூடிய காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.
அவர்களுள் 90 நலன்புரி முகாம்களில் 2 ஆயிரத்து 609 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 556 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 51 ஆயிரத்து 223 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 17 ஆயிரதது 62 குடும்பங்களை சேர்ந்த 55 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் ஆயிரத்து 486 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் 483 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்தில் 330 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 291 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 61 குடும்பங்களை சேர்ந்த 242 பேரும், தென் மாகாணத்தில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 189 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கும் பணிகள் தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இடம்பெறுவதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் பொலன்னறுவை மாவட்டத்திலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கலா ஓயாவின் இரண்டு வான் கதவுகளும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் தொடர்ந்து திறந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த நீர்த்தேகங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.