6 வருடங்களுக்கு மேலாக ஆசிரிய சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆசிரியர்கள் இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாகாண கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பின் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “பின்தங்கிய பிரதேசங்களில் 6 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியதன் பின்னர் எமது சொந்த இடங்களுக்கு வருவதற்காக இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தோம்.
இடமாற்றம் நிராகரிக்கப்பட்ட விபரக் கோவையில், சொந்த இடங்களில் ஆளணிப் பற்றாக்குறை இல்லை என காரணம் காட்டி, இடமாற்றத்தை நிராகரித்துள்ளனர்.
அதனடிப்படையில் 40இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளரை சந்தித்தோம். எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வரையான காலப்பகுதியை நிறைவு செய்தால், பின்னர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கின்றனர்.
அவ்வாறு பார்த்தால், நாங்கள் 7 வருடங்களைத் தாண்டியும் கடமையாற்ற வேண்டியதாக இருக்கும். எனவே வெளிமாவட்டத்தில் கடமையாற்றாத ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் யாழ்.மாவட்டத்தில் உள்ளார்கள். அவர்களை அந்த இடத்திற்கு மாற்றி எமக்கான இடமாற்றத்தை தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அதி கஸ்ரப் பிரதேசமான மடு, துணுக்காய், மன்னார் உள்ளிட்ட பல்வேறு வலயங்களைச் சார்ந்த 200இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தமக்கான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்” என்று குறித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.