விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் அதிகாரிகளுடன் சென்ற குறித்த பெண், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னதாக நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் குறித்த அதிகாரி அடையாளம் தெரியாத தரப்பினரால் கடத்திச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக அண்மையில் வெளிவிவகாரத் துறை அமைச்சு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
அதில் குறிப்பாக சுவிஸர்லாந்து தூதரகத்தினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கும், விசாரணைகளின் அடிப்படையில் பெறப்பட்ட தொழினுட்ப சான்றுகளுக்கும் இடையில் பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்துவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுவிஸ் தூதரகத்திடம் அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அவர் வெளிநாட்டுக்கு செல்ல முடியாதவாறு தடையுத்தரவு பெறப்பட்டது.
இந்த நிலையிலேயே விசாரணைக்காக குறித்த பெண் அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டார்.
இதேவேளை, குறித்த பெண், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு முதன்மை நீதிமன்ற சட்டமருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், சுவிஸ் தூதரகம் தெரிவிக்கும் விதத்தில் குறித்த பெண் அதிகாரி கடத்தப்பட்டமைக்கான எந்தவொரு உறுதியான தகவல்களும் இல்லை என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.