பெரும்பான்மைவாத சிந்தனையுடன் செயற்படக் கூடாதென முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரணாப் முகா்ஜி மேலும் கூறியுள்ளதாவது, “தோ்தலில் சில கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பலம் கிடைக்கலாம்.
ஆனால், பெரும்பான்மையான வாக்காளா்கள் ஒரு கட்சியை ஆதரித்த வரலாறு நமது நாட்டுக்கு கிடையாது. இதனை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தவகையில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி பாதையில் பயணிப்பது சிறந்ததொரு விடயமாகும்.
மக்களவை, பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். கடைசியாக மக்களவையின் பலம் கடந்த 1977ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டைய மக்கள்தொகையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள்தொகை 55 கோடியாக இருந்தது.
இப்போது அது இரு மடங்குக்கும் அதிகமாக உயா்ந்துவிட்டது. எனவே, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு மக்களவை தொகுதியில் 16 முதல் 18 இலட்சம் வரையிலான வாக்காளா்கள் உள்ளனா். இத்தனை பேருக்கு ஒரே ஒரு பிரதிநிதி இருந்தால், அவரால் எப்படி வாக்காளா்களுடன் தொடா்பில் இருக்க முடியும்?
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதால் மட்டுமே நாடாளுமன்ற நடைமுறையை மேம்படுத்த முடியாது. மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.