மீண்டும் கைதான வெளிநாட்டவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முகாமில் இருந்து தப்பிச் சென்ற 9 வெளிநாட்டவர்களில் 8 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதாவர்களே வெளியேற்றப்பட்டதாக திணைக்களம் இன்று (சனிக்கிழமை) கூறியது.
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த கைதிகளில் 9 பேர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளமை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டசோதனை நடவடிக்கையின் போது தெரிய வந்தது. இது தொடர்பாக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 8 பேர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் நைஜீரிய பிரஜைகள் எனவும் திணைக்களத்தின் சட்டக் கட்டுப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான கயான் மிலிந்த தெரிவித்தார்.
மிரிஹானை தடுப்பு முகாமில் கடன் அட்டை மோசடிகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த வியாழக்கிழமை சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது 75 கையடக்கத் தொலைபேசிகள் 5 மடிக்கணினிகள் மற்றும் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
அதனையடுத்து குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போதே அந்த முகாமில் இருந்தவர்களில் 9 பேர் தப்பிச்சென்றுள்ளமை தெரிய வந்தது. விசேட தேடுதல் நடவடிக்கைகளையடுத்து அவர்களில் 8 பேர் கண்டு பிடிக்கப்பட்டதுடன், அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமையே கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் சேர்த்து இப்போது 111 பேர் அந்த முகாமில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த கைதிகளில் அதிகளவில் நைஜீரிய பிரஜைகளே உள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்த இவர்களில் பெரும்பாலானோர் நிர்மாணத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர்.
தமது விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டு மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது