சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.
இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியி’லும் போராட்டம் வெடித்துள்ளது.
இவ்வாறு நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதேவேளை, டெல்லியில் போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.