பொலிஸார் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா இனி சாந்தியடையும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் வைத்தியர், பாலியல் துஷ்பியரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் சுட்டுக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக கொலைசெய்யப்பட்ட பெண் வைத்தியரின் தந்தை கூறுகையில், “என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. குற்றவாளிகள் 4 பேரையும் பொலிஸார் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும். 4 பேரை சுட்டுக்கொன்ற பொலிஸாருக்கும் தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை பொலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்துச் சென்ற பொலிஸார், எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுமாறு குற்றவாளிகளிடம் பணித்தனர்.
அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொலிஸாரின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் கொல்லப்பட்டதை அறிந்த மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.