நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பெரும் பிழை எனவும் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு அது பெருந்தடையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஒரு அரசால் கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை அடுத்துவரும் அரசால் இரத்து செய்வது நடைமுறை சாத்தியமற்றதாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டிலுள்ள அனைத்து துறைமுகங்களும் இலங்கை அரசின் கீழ் செயற்பட வேண்டும் என்பதே தனது அரசின் நிலைப்பாடு என்றும் அனைத்து துறைமுகங்களிலும் நாட்டிலுள்ள பொதுவான சட்டமே நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என கூறினார்.
மேலும் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் அதேவேளை, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அடிப்படை தேவையாகும் என்பதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டினார்.