வழக்கில் பிணையில் வெளியாக இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உடல்நல சிகிச்சை முடித்த பின்புதான் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பார் என்று அவரின் மனைவி நளினி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் நாளையே சிதம்பரம் பங்கேற்பார் என்று அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், “என்னுடைய கணவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
டெல்லி திஹார் சிறையில் இருந்து சிதம்பரம் இன்று மாலை விடுவிக்கப்படுகிறார். அவரின் உடல் நிலை பலவீனமாக இருக்கிறது. அதனால், அதற்கான சிகிச்சையை முதலில் எடுத்துக்கொண்டு அதன் பின்புதான் மாநிலங்களவைக் கூட்டத் தொடரில் சிதம்பரம் பங்கேற்பார்” எனத் தெரிவித்தார்.