ஆரம்பிக்கப்படவுள்ள இயற்கை உணவு விற்பனை நிலையத்தில் வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கோப்பாய் சந்தை கட்டிடத் தொகுதியில் ஒன்பது கடைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் பகிரங்க கேள்வி நடைமுறைகளின் பிரகாரம் சலுகைகளுடன் கூடியதாக போரினால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளவர்களிடம் இருந்தே முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.
இயற்கை மற்றும் உள்ளூர் உற்பத்தி உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தக்க ஆற்றலும் ஆர்வமும் உடைய வசதிக்குறைவான வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் நிரந்தர வதிவிடத்தினைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களிடம் இருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்தோர், அரசியல் கைதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தோர், போரில் குடும்ப உறுப்பினர்களை இழந்தோர் போன்றோரில் தெரிவு செய்யப்படும் ஆற்றலும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு இக் கடைத்தொகுதியில் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வலிகாhமம் கிழக்கில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் தலைமையுடைய குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களில் தெரிவு செய்யப்படும் சிலருக்கேனும் தொழில் முயற்சிகளை ஏற்படுத்தவேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இத்தீர்மானத்தினை எடுத்துள்ளது.
எதிர்வரும் ஏழு நாட்களுக்கிடையில் இக் கடைத்தொகுதிகளில் வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர்களில் உரிய நடைமுறைகளுக்கு அமையத் தெரிவு வெசய்யப்படுவோருக்கு கடைகள் பகிர்தளிக்கப்படும்” என தெரிவித்தார்.