கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்று ஒரு மாதத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி தாயொருவர் குறை மாதத்தில் பெற்ற குழந்தையை சட்ட விரோதமான முறையில் புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா தலைமையில் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் ருச்சிர நதீர மற்றும் பொலிஸார் முன்னிலையில் குறித்த சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் தனது கணவரை விட்டு விலகி அந்த தாய் தனிமையாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பெண்ணுடன் பழகிய ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறை மாதத்தில் பிள்ளை பிறந்ததாகவும் அந்த குழந்தையை ஊசி மூலமாக வெளியேற்றியதாகவும் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது
இந்நிலையில் குழந்தையின் தாயார் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.