இந்நாட்டை மாற்றியமைப்பதற்கு இலகுவான வரிமுறையொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் போது இந்நாட்டை செயற்படும் நாடாக மாற்றியமைப்பதாக உறுதிமொழி வழங்கினார். இதன்பொருட்டே அவருடன் நாமும் முன்னின்று செயற்படுகின்றோம்.
இதன்படி பொருளாதாரத்தை பலப்படுத்துவோம். வரிகளை குறைத்துள்ளோம். வரிகளைக் குறைத்த பின்னர் வருமானத்தை எப்படி ஈட்டுகின்றீர்கள் என வினவுகின்றார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரச வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரித்தாக குறிப்பிட்டார்கள். அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் பையிலிருந்து பணத்தை இடுவதைப் போல் காட்டிக்கொண்டார்கள்.
ஆனால் அரசாங்க வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரிக்கும் பொருட்டு இந்நாட்டு மக்களின் பைகளிலிருந்தே பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஏன் அரசாங்க நிறுவனங்களை நூறு வீதத்தால் அதிகரித்தார்கள்?
மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் கொள்ளையிட்ட பணத்தையும் இந்நாட்டு மக்களே மீளச் செலுத்த நேரிட்டது.
அதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் பத்து நாட்களுக்குள் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகஞ் செய்து, இந்நாட்டு பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறு மாதங்களிற்கு முன்னரே உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.