பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை பொலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவிக்கையில், “இந்த என்கவுன்டர் தொடர்பாக தெலுங்கானா உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நாங்கள் பரிசீலிக்கிறோம். உண்மை குறித்து அறிய இருக்கிறோம்.
ஆதலால், இந்த வழக்கை டெல்லியைச் சேர்ந்த உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதியை அமர்த்தி விசாரணையைத் தொடங்கச் சொல்வோம்” எனத் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27ஆம் திகதி இரவு கால்நடை பெண் மருத்துவர், 4 பேர்கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் லொறி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரையும் விசாரணைக்காக கடந்த வாரம் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
பொலிஸாரின் இந்த என்கவுன்டருக்கு பொதுமக்கள் தரப்பில் மிகப்பெரிய ஆதரவும், மனித உரிமைகள் விடயத்தில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. மேலும், சட்டத்தை பொலிஸார் கையில் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் என்கவுன்டர் செய்த பொலிஸார் தனியாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, வழக்கறிஞர் பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தெலுங்கானா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, கிருஷ்ணகுமார் சிங் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதற்கு பரிசீலிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.